பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கு மேற்பட்ட தமிழக விவசாயிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர். இருப்பினும் போராட்டம் மீண்டும் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் தங்களது நிலத்தில் பயிரிட முடியாமலும், பயிரிட வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை தமிழக விவசாயிகள், தேசிய நதிகள் இணைப்பு தென் இந்திய விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் 41 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கால அவகாசம் கேட்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததை தொடர்ந்தும் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்து தமிழகம் திரும்பினார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த வாக்குறுதியை செயல்படுத்தாத காரணத்தால் தென் இந்திய விவசாய சங்கத்தினர் மீண்டும் டெல்லியில் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்தனர்.
டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக புறப்பட முயன்றபோது காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் குழுவினர் இன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதியான ஜந்தர் மந்தரைத் தாண்டி வேறு எங்கும் போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படி விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர்.
இதுகுறித்து, தென் இந்திய விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், “தமிழக முதல்வர் உறுதியளித்ததால் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் வாங்கி தமிழகம் திரும்பினோம். ஆனால் தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவசாய கடனை ரத்து செய்யாத அளவிற்கு செய்து விட்டது. இது மனித உரிமை மீறிய செயலாகும். அதனால் விவசாயிகளின் வாழ்வாதராத்தை கருத்தில் கொண்டு மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தவுள்ளோம். மேலும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும், போலி வாக்குறுதிகளை இனி நம்ப மாட்டோம்” என்று தெரிவித்தார்.