பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டார். பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டதை, கூட்டணி கட்சிகள் ஒருமித்த கருத்துடன் வரவேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மாணவர் பருவத்தில் இருந்தே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் வெங்கையா நாயுடு, மிகுந்த அனுபவம் கொண்டவர் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
68 வயதான வெங்கையா நாயுடு, தற்போது, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கய்யா நாயுடு, நாளை காலை 11 மணிக்கு, வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.