இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரின் போது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காணாமல் போயினர். இது குறித்து சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் முன்னாள் அதிபர் ராஜபக்சே அமைத்த குழுவினரே, காணாமல் போனவர்கள் பற்றி 19 ஆயிரம் வழக்குகள் உள்ளதாக அறிக்கை அளித்து இருந்தனர்.
இதில் குறிப்பிட்ட 11 பேர் காணாமல் போனதில் தொடர்பு உடையதாக முன்னாள் கடற்படை செய்தி தொடர்பாளர் தளபதி தசநாயகே உள்பட 7 அதிகாரிகள் மீது புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தியதில், இந்த சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே தசநாயகே உள்ளிட்ட 7 அதிகாரிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது விவகாரத்தில் அரசு ஒருதலைபட்சமாக செயல்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை மறுத்துள்ள போலீஸ் செய்தி தொடர்பாளர் ருவன் குணசேகரா, காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் பணம் கேட்டு 7 அதிகாரிகளும் பேசிய தொலைபேசி உரையாடல் பதிவு உள்ளிட்ட வலுவான ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளதாக கூறினார்.