தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச்செல்லும் படகுகளையும், மீனவர்களையும் எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச்செல்வது தொடர்ந்து நடந்துவருகிறது. கடந்த சில நாட்களில் 60 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 161 படகுகளும் பிடித்துச்செல்லப்பட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, அவ்வப்போது, தமிழக மீனவர்களை விடுதலை செய்யும் இலங்கை அரசு, படகுகளை மட்டும் விடுவிப்பதில்லை.

இந்நிலையில், எல்லைதாண்டி வரும் படகுகளுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை அபராதம் விதிக்கவும், மீனவர்களுக்கும் அபராதம் விதிக்கவும் அந்த நாட்டு பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை வாபஸ் பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டு இருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளில் 42 படகுகளை முதல்கட்டமாக விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பரிந்துரை கடிதங்கள், ஊர்க்காவல்துறை, புத்தளம், திரிகோணமலை, மன்னார் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உடனடியாக 27 படகுகளை விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள 15 படகுகள் நாளை(திங்கட்கிழமை) விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நிரபராதி மீனவர் விடுதலை கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் கூறும்போது, “இலங்கை அரசு 42 படகுகளை விடுவிக்க நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து திங்கட்கிழமை தான் முழுமையான தகவல் கிடைக்கும். அவ்வாறு விடுதலை செய்யப்பட்டால் ஓரிரு நாட்களில் அந்த படகுகள் தமிழகம் வந்துசேரும். சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்” என்றார்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top