இந்திய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது; ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு

இந்தியா முழுவதும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. பாஜ.க. கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். தற்போதைய கட்சிகளின் பிரதிநிதித்துவ அடிப்படையில் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு சட்டப்பேரவை செயலாளார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவார். சென்னையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு சென்னை தலைமைச் செயலக சட்டப்பேரவை செயலாளர் அறைக்கு அருகே உள்ள கூட்டரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்காளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த பிங்க் நிற வாக்குச்சீட்டு வழங்கப்படும். வாக்குச்சீட்டில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பெயரும் அவர்களுக்கான எண்ணும் அச்சிடப்பட்டிருக்கும்.

வாக்குப்பதிவு செய்யும் அரங்கில் ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் என்ற அடிப்படையில் இரண்டு முகர்வர்கள் அமர்ந்திருப்பர். வாக்களிக்கும் உறுப்பினர்கள், வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு நேராக உள்ள எண்ணை மட்டும் தேர்வு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் வழங்கும் பேனாவைக் கொண்டே இந்த எண்ணை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், வேறு பேனாக்களை பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குச்சீட்டில் கையொப்பமோ, வேறு குறியீடோ எழுதப்பட்டால் வாக்கு செல்லாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியுள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவடைந்தவுடன் வாக்குபெட்டி சீல் செய்யப்பட்டு அன்று இரவோ அல்லது அடுத்த நாள் காலையோ பாதுகாப்பாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top