சனிக்கிழமையன்று பாட்னாவில் முதல்வர் நிதீஷ் குமாருடன் தான் கலந்து கொள்ளவிருந்த மானில அரசு நிகழ்ச்சியொன்றை துணை முதல்வர் தேஜஷ்வி யாதவ் புறக்கணித்ததால், பீகாரில் ஆளும் மெகா கூட்டணிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
பாட்னாவில் இன்று அரசு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக இருந்தது. இதன்படி, இருக்கையில் தேஜஸ்வி யாதவ் பெயர்ப்பலகையும் இடம் பெற்றிருந்தது. அனால், தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்ளவில்லை. இதன்காரணமாக அவரது பெயர், முதலில் மறைக்கப்பட்டு பின்னர் பெயர் முற்றிலுமாக நீக்கப்பட்டது. நிதிஷ் குமார் திட்டமிட்டபடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பீகாரின் மெகா கூட்டணியில் லாலு பிரசாத் யாதவ் கட்சி 80 இடங்களும், நிதிஷ்குமாரின் கட்சி 71 இடங்களும், காங்கிரஸ் கட்சி 27 இடங்களும் கொண்டுள்ளன. முதல்–மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல்–மந்திரியாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் பதவி வகிக்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் நிதீஷ் குமார் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்தபின், இக்கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் ஓட்டல் நிலம் பேர ஊழல் வழக்கில் தேஜஸ்வி யாதவ் மீதும், லாலு பிரசாத் யாதவ், மற்றும் குடும்பத்தினர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து நிதீஷ் குமார் வாயே திறக்கவில்லை. இதனால், கூட்டணிக்குப் பிரச்சனை ஏற்படும் என்று கருதப்பட்டது. இருப்பினும் காங்கிரஸ் இவர்களிடையில் மத்தியஸ்தம் செய்து கூட்டணியை தொடரச் செய்வதாக கருத இடம் இருக்கிறது.
சென்ற வாரம், “எங்கள் குழந்தையை எப்படி கொல்வோம் ?”, என்று கேட்டு, பீகார் மாநிலத்தின் மெகா கூட்டணி தொடரும் என ஜனதா தளம் (யூ) அறிவித்த அதே சமயத்தில், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
ஆயினும் தற்போது முதல்வர் நிதீஷ்குமார் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை தேஜஸ்வி யாதவ் புறக்கணித்ததன் மூலம் இரு கட்சிகளிடையே விரிசல் அதிகரித்து இருப்பதையே காட்டுகின்றது.