ஏ.ஆர்.ரகுமான் தனது 25 வருட இசைப் பயணத்தையொட்டி இலண்டனில் தனது இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்.
இந்நிகழ்ச்சிகளைப் பற்றி ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், “கடந்த 25 வருடங்களாக தொடரும் இசைப் பயணம் உண்மையிலேயே மறக்க முடியாதது. ஆச்சரியமானது. இந்த இசை சுற்றுப் பயணம் முழுக்க இசையும் நினைவுகளும்தான் முன் நிற்கின்றன. என் ரசிகர்களின் அன்பைப் பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டு உள்ளேன். அவர்களுடைய ஆதரவு எனக்கு ஊக்கம் தருகிறது. ‘ரோஜா’ முதல் ‘காற்று வெளியிடை’ படங்கள் வரைக்குமான என் இசைப் பயணத்தை கொண்டாடும் லண்டன் நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்க்கிறேன்”, என்று தெரிவித்து இருந்தார்.
இந்த இசை நிகழ்ச்சிகளில் பென்னி தயால், நீத்தி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
“நேற்று இன்று நாளை” என்கிற இந்த இசை சுற்றுப் பயணத்தின் முதல் நிகழ்ச்சி ஜுலை 8-ம் தேதி லண்டனில் நடைப்பெற்றது. லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருந்தனர். வழக்கமாக இசை நிகழ்ச்சிகளில் ஏ.ஆர். ரகுமான் இந்தி பாடல்களை பாடுவது வழக்கமானது. ஆனால் இந்த இசை நிகழ்ச்சியில் அவர் தமிழ் பாடல்களை மட்டும் பாடி தங்களை ஏமாற்றிவிட்டதாகவும், இதனால் நிகழ்ச்சியை புறக்கணித்து அரங்கத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் டுவிட்டரில் ரசிகர்கள் தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.
இந்தி பாடல்களை அவர் பாடாததை குறிப்பிட்டு தங்களுடைய கோபத்தை டுவிட்டரில் வார்த்தைகளில் பதிவிட்டு உள்ளனர்.
இதற்கு தமிழ் ரசிகர்கள் பதிலடியை கொடுத்ததால் டுவிட்டரில் மோதல் ஏற்பட்டு உள்ளது. அர்சனா சவந்த் என்ற ரசிகை வெளியிட்டு உள்ள டுவிட் செய்தியில், உங்களுடைய இன்றைய இசை நிகழ்ச்சியினால் மிகவும் ஏமாற்றம் அடைந்துவிட்டேன். இதற்காக மிகவும் நீண்ட காலம் நான் காத்து இருந்தேன். இதனை எதிர்பார்க்கவில்லை, என குறிப்பிட்டு உள்ளார். இந்தியில் பாடாததால் ஏமாற்றம் அடைந்துவிட்டதாகவும், இதனால் இசை நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர். சிலர் இசை நிகழ்ச்சிக்கு செலுத்திய கட்டணத்தை திருப்பி தாருங்கள், எங்களை மகிழ்விக்கவில்லை, இந்தியில் பாடவில்லை என்று எல்லாம் பதிவிட்டு உள்ளனர்.
இதற்கு பதிலடியாக தமிழ் ரசிகர்கள் டுவிட்டர்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். வெளிநாட்டில் உங்களால் ஒரு மணிநேரம் மற்றொரு மொழி பாடலை கேட்கமுடியவில்லை, இந்தி திணிப்பை எதிர்க்கொள்ளும் தென் இந்தியர்களின் நிலையின் உண்மை குறித்து நினைத்து பாருங்கள் என ஹர்சா என்ற டுவிட்டர்வாசி பதிலடியை கொடுத்து உள்ளார். இந்தி பாடல்களை எங்கே? என கேள்வி எழுப்பியவர்களுக்கு இந்த நிகழ்ச்சியானது பிரத்யேகமாக தமிழ் பாடல்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது, நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்து உள்ளோம். நிகழ்ச்சியின் பெயரே “நேற்று, இன்று, நாளை” தான் என தமிழர்கள் பதிலிட்டு உள்ளனர்.
இந்தி திணிப்பு என்றால் என்ன என்பதை தனது பாடல்கள் மூலம் புரியசெய்த ஏ.ஆர். ரகுமானுக்கு பாராட்டுக்கள் என அவரது ரசிகர்கள் டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்தி பாடல்கள் மூலம் அவர் உலக அளவில் பிரபலம் ஆனார் என பதிவிட்டவர்களுக்கும் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. இது தமிழ் இசை நிகழ்ச்சி. தமிழ் சினிமாதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. பிறகெப்படி அவர் இந்தி பாடல்களை பாடுவார்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.