மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் பிரபாகரன் ஸ்ரீவிஜயன்(வயது 27). இவர் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2012 ம் ஆண்டு சிங்கப்பூர் குடி நுழைவு மையத்தில், இவர் ஓட்டி வந்த காரில் இருந்து 22.24 கிராம் போதைப் பொருளை சிங்கப்பூர் போலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர்.
எனினும், அந்தக் கார் தன்னுடையது இல்லை என்றும், நாதன் என்பவரிடம் இருந்தே அந்த காரை பெற்றதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பது தனக்குத் தெரியாது என்றும் பிரபாகரன் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி மருந்துகளை தவறாக பயன்படுத்தும் சட்டத்தின் கீழ் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் பிரபாகரனுக்கு மரண தண்டனை விதித்திருந்தது. கோலாலம்பூரின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரபாகரனின் வழக்கு விசாரணை நடைபெற விருந்த நிலையில் பிரபாகரனின் மரண தண்டனையை ஒத்திவைக்க அவரது வழக்கறிஞர் கடந்த செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நேற்று நிராகரித்ததுடன், பிரபாகரனின் தண்டனையை அவ்வாறு நிறுத்த முயல்வது முறையற்றது என்றும் கண்டித்திருந்தனர்.
இந்த நிலையில் பிரபாகரன் ஸ்ரீவிஜயனுக்கு சாங்கி சிறைச்சாலையில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.