இளங்கலை மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய வழக்கில், இட ஒதுக்கீடை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதனன்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
மதுரையைச் சேர்ந்த மாணவர் சிபி உள்ளிட்ட மூவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், “இந்தியா முழுவதும் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் நீட் தேர்வு முடிவின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.
இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஜூன் 22-ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. எஞ்சிய 15 சதவீத இடங்களில் மட்டுமே மத்திய அரசு பாடத்திட்டம் மற்றும் பிற பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்கள் சேர்க்கப்படுவர் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனால், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, 85% இடஒதுக்கீட்டு அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி கல்யாணசுந்தரம், 85% இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்தார்.
இது பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது, “சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் மூலம் திறமையாக வாதம் செய்யப்பட்டது. இதை அரசும் கண்காணித்தது.
தற்போது உயர்நீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு தடை விதித்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். நமது உரிமை நிலை நாட்டப்படும்.” என்று கூறினார்.