அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள லோகன்ஸ் போர்ட் நகரில் வசித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மனோநல மருத்துவர்-தம்பதி உமாமகேஸ்வர் ராவ் காலாபடபு (வயது 63), சீதாகீதா (வயது 61). இவர்கள் பயணம் செய்த பைப்பர் ஆர்ச்சர் பி.ஏ.28 விமானம் விபத்துக்குள்ளானதில் இருவரும் இறந்தனர்.
இவர்கள் இருவரும் இணைந்து லோகன்ஸ்போர்ட் நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ‘ராஜ் கிளினிக்’ என்ற பெயரில் மனநல மருத்துவமனை நடத்தி வந்தனர். இண்டியானா மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் இதன் கிளை மருத்துவமனைகள் உள்ளன. கடந்த 8-ந் தேதி இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான சிறிய விமானத்தில் லோகன்ஸ்போர்ட் நகரில் இருந்து புறப்பட்டனர். விமானத்தை உமாமகேஸ்வர் இயக்கினார். இந்த விமானம் ஓகியோ மாகாணத்தின் தெற்கு பகுதியில் பெவர்லி என்ற கிராமத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்த போது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் உமாமகேஸ்வர், சீதாகீதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
உமாமகேஸ்வர் சிறந்த புகைப்பட கலைஞர் ஆவார். தனது புகைப்பட கலைக்காக பல்வேறு மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்று உள்ளார். அதே போல் சீதாகீதா சிறந்த இசைக்கலைஞர் ஆவார்.