வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து படிப்பதற்கு, நாட்டின் புதிய குடியேற்ற கொள்கையின் அடிப்படையில் உள்நாட்டு பாதுகாப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதி செய்யும் விதமாக புதிய நிபந்தனை ஒன்றை விதிக்க டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
தற்போது அமெரிக்காவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவ-மாணவிகள் தாங்கள் அமெரிக்க கல்வித் திட்டத்தின் கீழ் படிப்பதற்கு பதிவு செய்தது முதல் அந்த படிப்பை முடிக்கும் காலம் வரை ஒரு முறை விண்ணப்பித்தால் மட்டும் போதுமானது. இவர்களுக்கு தங்கியிருந்து படிக்கும் காலம் வரை எப்-1 விசா வழங்கப்படுகிறது.
புதிய விதிமுறையின்படி அமெரிக்காவில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்கள் பல் கலைக்கழங்களில் படிப்பை மேற்கொள்ள பதிவு செய்த நாளில் இருந்து அங்கு தங்கி படிக்கும் காலம் வரை ஆண்டுதோறும் தங்களுடைய படிப்புக்கான பதிவை மறு விண்ணப்பம் செய்து புதுப்பிக்கவேண்டும். அதனால், தற்போதுள்ள ஒரு முறை மட்டுமே பதிவு செய்யும் முறை தானாக ரத்தாகிவிடும். இதற்கான கட்டுப்பாட்டு விதிகள் 18 மாதங்களில் கொண்டு வரப்பட்டு விடும் என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி, வாஷிங்டன் நகரை சேர்ந்த குடியேற்றத்துறை அட்டார்னி அபர்ணா தவே கூறுகையில், புதிய பரிந்துரையின்படி மாணவர்கள் ஆண்டுதோறும் 200 அமெரிக்க டாலர்கள் செலவு செய்ய வேண்டியிருப்பதால், இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிக்கும் ஆர்வம் குறைந்துவிடும் என்றார். ராகுல்சவுதா என்பவர், சர்வதேச மாணவர்கள் மீதான ஆய்வு குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது, என்று கவலை தெரிவித்தார்.