மாடுகள் சந்தையில் கசாப்பிற்காக விற்பனை செய்யப்படுவதைத் தடை செய்யும் மத்திய அரசின் அறிவிப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைநிறுத்த ஆணை பிறப்பித்ததை உச்சநீதிமன்றம் இன்று அங்கீகரித்துள்ளது.
இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைநிறுத்த ஆணை நாடு முழுவதும் செல்லுபடியாகும்.
சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மாற்றியமைக்க விரும்பவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் தடுத்து நிறுத்தும் முன்னர், கேரள உயர்நீதிமன்றம் அதனைத் தடுத்து நிறுத்த மறுத்து விட்டது.
இவ்விரு முரண்பட்ட ஆணைகளில், சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிராக வழங்கிய தடுப்பு ஆணையே செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.
மிருகச் சந்தையில் கசாப்பு செய்வதற்காக விற்பனை மற்றும் கொள்முதல் ஒழுங்குமுறையின் தற்போதைய அறிவிப்பு பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இறைச்சி ஏற்றுமதியாளர்கள் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் , உச்சநீதிமன்றத்தில், “கால்நடைகளின் கசாப்பு ஒழுங்குமுறை பற்றிய அறிவிப்பைப் பற்றி மக்கள் மத்தியில் பயமும் கலக்கமும் இருக்கிறது” என்று கூறினார்.
வணிகங்கள் தடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில், உச்சநீதிமன்றம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்படி கபில் சிபல் கேட்டுக்கொண்டார்.