நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் நடிகர் திலீப் கைது

நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில்  பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

சென்ற பிப்ரவரி மாதம் 17–ந் தேதி, நடிகை பாவனா கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் வழிமறித்து கடத்தப்பட்டு, காரிலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கேரளாவையே உலுக்கிய இச்சம்பவம் நடந்த ஓரிரு நாளில், சம்பவம் நடந்த காரின் டிரைவர் மார்ட்டின் அந்தோணி என்பவன் கைதானான். அவன் பல்சர் சுனில் என்பவனை பற்றியும், அவனுடைய கூட்டாளிகளை பற்றியும் தெரிவித்தான். இதையடுத்து, பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தின் சதி பின்னணியை கண்டறிய ஐ.ஜி. தினேந்திர காஷ்யப் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. சந்தியா, வழக்கின் மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இச்சம்பவத்தில், பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் அதை மறுத்து,  பல்சர் சுனிலை தனக்கு தெரியாது என்றார்.

இந்நிலையில்,  நடிகர் திலீப் நேற்று காலை கைது செய்யப்பட்டார். நடிகை பாவனாவை கடத்துவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

திலீப்பின் சதித்திட்டத்துக்கு காரணம் பாவனா மீது கொண்ட தனிப்பட்ட பகையே என்று பொலிசார் கூறினர்.  பல்சர் சுனில் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக திலீப், கடந்த மாதம் போலீசில் புகார் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில், அவரிடம் 2 வாரங்களுக்கு முன்பு போலீசார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதையடுத்து, திலீப்புக்கு எதிரான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகின. பல்சர் சுனில், திலீப்புக்கு எழுதிய கடிதம் மற்றும்  பல்சர் சுனிலுக்கும், திலீப்பின் மேலாளர் அப்புன்னிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ ஆகியவை வெளியானது. கடந்த நவம்பர் மாதம் திலீப் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பல்சர் சுனில் நிற்பது போன்ற புகைப்படமும் வெளியானது.

ரூ.50 லட்சம் கூலிக்காக, நடிகை பாவனாவை கடத்தியதாகவும்,  பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவன் நடத்தும் கடையின் ஊழியரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் பல்சர் சுனில் தெரிவித்தான். இதனால், காவ்யா மாதவன் மீதும் சந்தேகம் உருவாகி அவரது கடையில் போலீசார் சோதனை நடத்தினர்.

திலீப்பை கைது செய்யும் முடிவு, ஒரு வாரத்துக்கு முன்பே, போலீஸ் டி.ஜி.பி. லோகநாத் பெகரா தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்காக, சிறப்பு விசாரணை குழு தலைவர் தினேந்திர காஷ்யப்பை கொச்சியிலேயே தங்கி இருக்குமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதையடுத்து, நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார்.

சதித்திட்டத்திற்கான பின்னணி குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

நடிகர் திலீப், அவருடைய முதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியர், நடிகை பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். ஒருகட்டத்தில், காவ்யா மாதவன் மீது திலீப் காதல்வயப்பட்டார். இதை மஞ்சு வாரியரிடம் பாவனா தெரிவிக்கவே, பாவனா மீது திலீப் ஆத்திரம் அடைந்தார். பின்னர், மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த திலீப், காவ்யா மாதவனை 2–வது திருமணம் செய்து கொண்டார். முன்பு, கூட்டாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்தபோது வாங்கிய சில நிலங்களை பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து போடுமாறு திலீப் கேட்டபோது, பாவனா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதற்கிடையே, பாவனாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. அந்த திருமணத்தை கெடுக்கும் நோக்கத்தில், பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை அவருடைய வருங்கால கணவருக்கு அனுப்பி வைக்க பல்சர் சுனிலுடன் இணைந்து திலீப் சதித்திட்டம் தீட்டியிருக்கிறார். தற்போது சதித்திட்டம் அம்பலம் ஆனதால், திலீப் கைது செய்யப்பட்டார்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top