காஷ்மீர்: ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை அருகே அமர்நாத் திருப்பயணிகள் சென்றுகொண்டிருந்த பஸ் மற்றும் அனந்த்னாக் அருகே ஒரு பொலிஸ் குழு மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் ஒரு உயிர் ஊசலாடும் நிலையில் உள்ளார். இது அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் ஆகும்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் முனிர் கான் இந்தத் தாக்குதலில் 12 பேர் காயமடைந்ததாக தெரிவித்தார். காஷ்மீரில் உள்ள இணைய சேவைகள் தாக்குதலுக்கு பின்னர் தடுக்கப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளான யாத்ரீகர்களின் பஸ் குஜராத்தில் இருந்து புறப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை தாக்குதலுக்கு பின்னர் மூடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த சூழ்நிலையை குறித்து ஆராய்ந்து வருகின்றனர். மோடி டிவிட்டரில் “ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமாதானமானமாக சென்றுகொண்டிருந்த அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான கொடூரமான தாக்குதலால் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவு வேதனை அடைந்தேன். ஆனால் இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்களாலும், வெறுப்புணர்ச்சியின் தீய எண்ணங்களாலும் இந்தியா ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார்.