வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி

இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி, பேட்டிங்குக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தாலும், இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறினார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 51 ரன்னும், கைல் ஹோப் 46 ரன்னும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 36 ரன்னும், ரோவ்மன் பவெல் 31 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ‌ஷமி 4 விக்கெட்டும், உமேஷ்யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஷிகர் தவான் 4 ரன்னில் அல்ஜாரி ஜோசப் பந்து வீச்சில் எவின் லீவிஸ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து கேப்டன் விராட்கோலி களம் கண்டார். கடந்த ஆட்டங்களில் ஷாட் பிட்ச் பந்து வீச்சில் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்த விராட்கோலி இந்த முறை ஷாட் பிட்ச் பந்துகளை திறம்பட கையாண்டார். அவரை முந்தைய ஆட்ட பாணியில் வீழ்த்த நினைத்த வெஸ்ட்இண்டீஸ் பந்து வீச்சாளர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அணியின் ஸ்கோர் 84 ரன்னாக இருந்த போது தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 51 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் பிஷோ பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அடுத்து தினேஷ்கார்த்திக், விராட்கோலியுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடி அணியை வெற்றியை நோக்கி வேகமாக அழைத்து சென்றனர். 67 பந்துகளில் அரை சதத்தை கடந்த விராட்கோலி 108 பந்துகளில் சதத்தை எட்டினார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 28–வது சதம் இதுவாகும்.

இந்திய அணி 36.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஸ்டன் சேஸ் வீசிய பந்தை விராட்கோலி சிக்சருக்கு தூக்கி அணியை வெற்றி பெற வைத்தார். விராட்கோலி 115 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் 111 ரன்னும், தினேஷ் கார்த்திக் 52 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 3–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 4–வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. சதம் அடித்த விராட்கோலி ஆட்டநாயகன் விருதையும், மொத்தம் 336 ரன்கள் குவித்த ரஹானே தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top