ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாட்டில் கலந்துகொண்டபோது, இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை சந்தித்த இந்தியப் பிரதமர் மோடி, விஜய் மல்லையாவை நாடு கடத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசினார். அதன்படி ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, கனடா பிரதமர் ஜஸ்டின் டிரிடியூ ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்தார்.
முன்னதாக அவர் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.
மாநாட்டின் நிறைவு நாளான நேற்று மேலும் பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அதன்படி தென் கொரியா அதிபர் மூன் ஜே-இன்னை சந்தித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கான உறுதியை வெளிப்படுத்தினார். அப்போது, தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போது கொரிய மொழியில் மோடி வாழ்த்தியதை மூன் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார்.
நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்குடனான சந்திப்பின் போது, இரு நாட்டு பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது இந்தியாவின் தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதியில் நார்வேயின் ஓய்வூதிய நிதிகள் மூலம் பங்களிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
மேலும் இத்தாலி பிரதமர் ஜென்டோலினியை சந்தித்த மோடி, நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலக உணவு பதப்படுத்துதல் கண்காட்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். தங்கள் நாட்டு தொழில் துறையில் இந்தியா செய்துள்ள முதலீடுகளுக்காக மோடிக்கு, ஜென்டோலினி நன்றி தெரிவித்தார்.
இதைப்போல அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மேக்ரி, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோருடனும் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் பேசினார்.
இந்த சந்திப்புகளின் தொடர்ச்சியாக இங்கிலாந்து பிரதமர் தேரசா மேவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இந்திய வங்கிகளில் இருந்து கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுவிட்டு, இங்கிலாந்தில் தலைமறைவாக வசித்து வரும் விஜய் மல்லையா மற்றும் நிதி மோசடி வழக்கில் தேடப்படும் லலித்மோடி ஆகியோரை இந்தியாவுக்கு விரைவில் நாடு கடத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு தெரசாவை, மோடி கேட்டுக்கொண்டார்.