ஞாயிறன்று வடகொரிய அரசு ஊடகங்கள் அமெரிக்காவின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அமெரிக்க இராணுவம் பொறுப்பற்ற முறையில் தம்மை கோபமூட்டுவதாக வடகொரிய அரசு ஊடகங்கள் குற்றம் சாட்டின. கொரிய தீபகற்பம் பகுதியை அணு ஆயுத போர் முனையமாக மாற்றிவிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக, வட கொரிய அரசுக்கு சொந்தமான ‘ரோடாங் சின்முன்’ நாளிதழில் ’வெடி மருந்து பீப்பாய்க்கு அருகே நெருப்போடு விளையாட வேண்டாம்’ என்ற தலைப்பில் இன்று வெளியாகியுள்ள சிறப்பு கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகிலேயே எளிதில் தீப்பற்றக் கூடிய வகையில் உள்ள வட கொரியா பகுதியில் அமெரிக்க ராணுவம் நிகழ்த்தியுள்ள ஆபத்தான அத்துமீறல் கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுத போர் முனையமாக மாற்றும் நிலைக்கு தள்ளிவிடும். போர்வெறி கொண்டவர்களால் கூட்டுப் பயிற்சி என்ற பெயரில் நமது நாட்டுக்கு எதிராக தற்போது நடத்தப்பட்டுள்ள இதுபோன்ற அபாயகரமான தந்திரங்களை இந்த தீபகற்பத்தில் அணு ஆயுதப் போரை தூண்டிவிடும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.
ஒரு தவறான கணிப்பு அல்லது சிறிய பிழை நேர்ந்தாலும் அதன் விளைவு அணு ஆயுதப் போரின் துவக்கமாகவும் இன்னொரு உலகப் போரின் துவக்கமாகவும் அமைந்து விடும்.
இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு B-1 குண்டுவீச்சு விமானங்கள் குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படை தளத்திலிருந்து 2,000 மைல்கள் பறந்து தென் கொரிய போர் விமானங்களுடன் ஒரு துல்லியமான தாக்குதல் பயிற்சியை நடத்தின. இவர்களுடன் ஜப்பானிய வீரர்களும் இணைந்து விமான பயிற்சியில் ஈடுபட்டனர்.
அமெரிக்க விமானப் படை, ஒரு அறிக்கையில், “எங்கள் நட்பு நாடுகளுக்கு இரும்புக் கவசப் பாதுகாப்பு அளிப்பதில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டின் ஒரு நிரூபணம்” என்று கூறியது.
84 பில்லியன் பவுண்டு குண்டுகளை சுமந்து செல்லும் வசதியுள்ள குண்டுவீச்சு விமானங்கள், பிலுங்ங் ரேஞ்சில் மந்தநிலை ஆயுதங்களை வெளியிட்டன. இந்த பயிற்சி முடிய 10 மணி நேரம் எடுத்துக் கொண்டது.
பசிஃபிக் விமானப்படை கமாண்டரான ஜென். டெரென்ஸ் ஓ. சாக்னெஸ்ஸி இதுபற்றிக் கூறும்போது, “வட கொரியாவின் நடவடிக்கைகள் நம்முடைய கூட்டாளிகளுக்கும், பங்காளிகளுக்கும், நம் நாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. தேவைப்பட்டால், எங்களது கூட்டு விமானப்படைகளின் முழுத் திறனையும் உபயோகிப்போம்; அதற்கான தகுந்த பயிற்சியையும் ஆயுதங்களையும் நாம் பெற்றுள்ளோம்”, என்றார்.