லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகனும் பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது, டெண்டர் விட 3 ஏக்கர் நிலம் பெற்றதாக ஊழல் புகாரை முன்வைத்து மொத்தம் 5 வழக்குகளை சிபிஐ இன்று பதிவு செய்துள்ளது.
பிஹாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. பாட்னா, ராஞ்சி, புவனேஸ்வர் மற்றும் குர்காவ்ன் உட்பட மொத்தம் 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில், ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது லாலு மீது பல்வேறு ஊழல் செய்தற்கான ஆதாரம் சிக்கியிருப்பதாக சிபிஐ கூறியுள்ளது.
தன் மீதான வழக்கு பதிவு செய்த சிபிஐ புகார்களை லாலு மறுத்துள்ளர். இது ‘பாஜகவின் சதி’ எனவும் லாலு கருத்து கூறியுள்ளார். இது குறித்து லாலு கூறுகையில், ”இதைக் கண்டு நானும், எனது கட்சியும் அஞ்ச மாட்டோம். அந்த டெண்டர் விடப்பட்டதில் எந்த தவறுகளும் செய்யப்படவில்லை. தனக்கு எதிராகப் பேசுபவர்களின் வாயை அடைக்க பாஜக செய்யும் வேலை இது. குறிப்பாக எனது குடும்பத்தார் தொடர்ந்து குறி வைக்கப்படுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், “சி.பி.ஐ ஏன் சோதனையில் ஈடுபட்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். என்னை அழித்தாலும் பி.ஜே.பி மற்றும் மோடியை, ஆட்சியில் இருந்து அகற்றிய பின்னரே ஓய்வுபெறுவேன். பி.ஜே.பி-க்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைப்பதன் காரணமாகவே என்னை இலக்காக்குகிறார்கள். எனக்கு எதிராகவும் என்னுடைய குடும்பத்துக்கு எதிராகவும் அரசியல் பழிவாங்கும் செயல் நடக்கிறது. என்னுடைய எதிரிகள் என்னைச் சிறைக்கு அனுப்ப முயலுகிறார்கள்” என்றார்.
அவருக்கு மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பதிலளிக்கும் விதமாக, “அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அதிகாரத்தின்படி சி.பி.ஐ தனது கடமையை செய்கிறது.” என்று கூறியிருக்கிறார்.