தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் தமீமுன் அன்சாரி, கருணாஸ் உள்ளிட்டவர்கள் பேரறிவாளனை சிறைவிடுப்பில் அனுப்புவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கோரினர். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, “மதிப்பிற்குரிய பேரறிவாளனை பரோலில் அனுப்புவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், 10 ஆண்டுகளை சிறையில் கழித்த கைதிகளை விடுதலை செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
பேரறிவாளனுக்கு சிறுநீர்ப் பாதை தொற்று உள்பட பல உடல்நலப் பிரச்சனைகள் இருப்பதால் அவரை பரோலில் விடுவிக்க வேண்டுமென அவரது தாயார் அற்புதமம்மாள் கோரிவருகிறார்.
ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீதிமன்றம் ரத்துசெய்த பிறகு, அவர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.