கடந்த 4 நாள்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தமிழக திரையரங்கு உரிமையாளர்கள், போராட்டத்தை வாபஸ் பெற்று, திரையரங்குகளை இன்று முதல் திறப்பதற்கு ஒப்புதல் அளித்தனர்.
கேளிக்கை வரி பிரச்னை தொடர்பாக பேச 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளதையடுத்து, 4 நாட்களாக நீடித்த திரையரங்கு வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
திரைத்துறை மீதும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கேளிக்கை வரி 30 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 1000 தியேட்டர்கள் மூடப்பட்டன. அமைச்சர்கள் ஜெயக்குமார், வீரமணி, வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோருடன் திரையுலகினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கேளிக்கை வரி பிரச்னை தொடர்பாக பேசி முடிவு எடுக்க 12 பேர் கொண்ட குழுவை அரசு நியமித்தது.
இதில் அரசு தரப்பில் 6 பேரும் திரையுலகம் தரப்பில் 6 பேரும் இடம் பெறுவர் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 4 நாட்களாக நீடித்த தியேட்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.இது குறித்து அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சினிமா தியேட்டர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து, பொறுமையுடன் இருந்த பொதுமக்களுக்கு நன்றி. 4வது நாளாக தினமும் 20 கோடி ரூபாய் அளவில் பேரிழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் எங்களுடைய சிரமங்களைப் புரிந்துகொண்டனர். வரி வேண்டுமா? வேண்டாமா என்று முடிவெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. முடிவு எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்கள் இயங்கும். ஜிஎஸ்டி வரிவிதிப்பின்படி, இன்று முதல் 100 மற்றும் அதற்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத வரியும், 100 ரூபாய்க்கு கூடுதலான டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத வரியும் வசூலிக்கப்படும், அதன்படி 50 ரூபாய் டிக்கெட் 59 ரூபாயாகவும், 90 ரூபாய் டிக்கெட் 106 ரூபாயாகவும், 100 ரூபாய் டிக்கெட் 118 ரூபாயாகவும், 120 ரூபாய் டிக்கெட் 153 ரூபாயாகவும் இருக்கும். புதுச்சேரியில் நேற்று மாலை முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.