தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் விதிமீறல் நடந்ததாக கூறி, ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பீட்டா மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது.
காளைகள் காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், ஜல்லிக்கட்டில் மிருகவதை இருப்பதாகவும் கூறி பீட்டா, தமிழர்களின் வீரவீளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெறாதவாறு உச்சநீதிமன்றத்தில் முன்னர் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடைப்பெறவில்லை.
தமிழக இளைஞர்களால், இந்த போட்டி நடத்தப்பட வேண்டும், தமிழ் கலாச்சாரம் காக்க வேண்டும் என அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம், மதுரையின் தமுக்கம், சென்னையில் மெரினா என தமிழகம் முழுவதும் பரவி உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு வலுப்பெற்றது. இதன் எதிரொலியாக தமிழக சட்டசபையில் மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படுத்தும் விதமாக, இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மிருக வதை நடந்ததாகவும், விதிமீறல் இருந்ததாகவும் கூறி, தமிழக அரசின் மிருக வதை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பீட்டா மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது. இது மீண்டும் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழ வீரவிளையாட்டு கழகத்தை சேர்ந்த ராஜேஷ் இப்பிரச்னையை சட்டரீதியாக சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.