சினிமா டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரியும், தமிழக அரசு 30 சதவீதம் கேளிக்கை வரியும் விதித்து இருப்பது தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேளிக்கை வரியை ரத்து செய்து திரையுலகை காப்பாற்ற நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று பட உலகினர் பலர் வேண்டுகோள் விடுத்து வந்தனர். சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பதிவிட்டனர். ரஜினிகாந்த் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அடுத்த வாரம் அவர் சென்னை திரும்ப திட்டமிட்டு உள்ளார்.
இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கேளிக்கை வரி குறித்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ரஜினிகாந்த் கருத்து பதிவிட்டு உள்ளார்.
டுவிட்டரில், “தமிழ் திரையுலகில் லட்சக்கணக்கானோர் பணிபுரிகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்கள் கோரிக்கையை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு உள்ளார்.
திரைப்படத்துறைக்காக அரசுக்கு கோரிக்கை விடுத்த ரஜினிகாந்துக்கு, கமல்ஹாசன் நன்றி தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “திரைப்படத்துறைக்காக அக்கறையோடு குரல் கொடுத்த ரஜினிகாந்துக்கு நன்றி. முதலில் அரசுக்கு கோரிக்கை வைப்போம். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கமல்ஹாசன் கருத்து பதிவிட்டு இருக்கிறார்.