* கத்தார் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் நேற்று முன்தினம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். இந்த நாடுகள் விதித்து உள்ள 13 நிபந்தனைகள் குறித்து ஆலோசிப்பதாக கத்தார் அறிவித்ததை தொடர்ந்து இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
* உக்ரைனில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில் வைரஸ்களை பரப்பி சைபர் தாக்குதல் நடத்த மர்ம நபர்கள் முயற்சித்தனர். ஆனால் சைபர் பிரிவு போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு இந்த தாக்குதல் முயற்சியை முறியடித்தனர்.
* பிலிப்பைன்சில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வியட்நாம் நாட்டை சேர்ந்த 6 மாலுமிகள் ஐ.எஸ். ஆதரவுபெற்ற பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களில் 2 பேரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பாசிலன் தீவுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டதாக பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் தெரிவித்தனர்.
* ஜப்பானில் 2020-ம் ஆண்டு நடைபெற இருக்கும் கோடைகால ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக தலைநகர் டோக்கியோவில் பொதுஇடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கும் சட்டம் அமலுக்கு வரும் என அந்த மாகாணத்தின் கவர்னர் யூரிகோ கோய்கி தெரிவித்து உள்ளார்.
* ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் மொசூல் நகரை முழுமையாக கைப்பற்ற ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. அந்த நகரில் உள்ள திகிரிஸ் ஆற்றை கடந்து 250 மீட்டர் தூரத்துக்கு ராணுவத்தினர் முன்னேறி சென்றுவிட்டனர். இது மிகப்பெரிய வெற்றி என கருத்து தெரிவித்து உள்ள அந்நாட்டின் அதிபர் ஹைதர் அல்-அபாதி இது தொடர்பாக ராணுவ வீரர்களுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளார்.