வடகொரியா சோதனை எதிரொலி: ஐ.நா. அவசரக் கூட்டம்; அமெரிக்க, தென் கொரிய படைகள் ஏவுகணையை எதிர்கொள்ளும் பயிற்சி

வடகொரியா நேற்று மேற்கொண்ட கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனையின் எதிரொலியாக ஐ.நா. அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. மேலும், அமெரிக்க, தென் கொரிய படைகள் ஏவுகணையை எதிர்கொள்ளும் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவில் ஒரு குடும்பத்தின் ஆட்சி நடந்து வருகிறது. அதன் தலைவராக கிம் ஜாங் அன் பதவி வகித்து வருகிறார். அதன் அண்டை நாடான தென்கொரியாவில் பாதுகாப்புக்காக அமெரிக்கப் படைத்தளமும், படைவீரர்களும் இருக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக அணுகுண்டு சோதனை, ஏவுகணை, ராக்கெட் என்ஜின், கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை என பல்வேறு சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. ஐ.நா.வின் பல்வேறு தடைகளையும் மீறி இந்த சோதனைகளை வடகொரியா நடத்துகிறது.

சமீபத்திய வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை சோதனை செய்தது வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

வடகொரியாவின் இந்த ஏவுகணையானது அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் வரை சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொரியா தீபகற்ப பகுதியில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் ஆகியோர் வடகொரியா விவகாரம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது உலக நாடுகளிடையே அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

வடகொரியாவின் இத்தகைய செயலுக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஐ.நா. பொதுக்குழுவை அவசரமாக கூட்டவும் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ஐ.நா. அவசரக் கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top