ஆஸ்திரேலியவில் காணப்படும் புஷ்வுட் பெரி என்ற பழத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு இரசாயனம், புற்றுநோய் கட்டிகளை நீக்கும் தன்மை உடையதாக காட்ட்ப்பட்டுள்ளது. மேலும் இதனை விலங்குகள் மற்றும் மனிதர்களுடைய பயன்பாட்டிற்கு உபயோகிப்பதற்காக, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதைக்குறித்து சமூக வலைத் தளங்களில், புஷ்வுட் பெரியினால் புற்றுநோயை 48 மணி நேரத்தில் குணப்படுத்த முடியும் என்றவாறு தகவல்கள் பரப்பப் படுகின்றன. ஆனால் இத்தகவலில் பாதி உண்மை, பாதி பொய் கலந்திருப்பதாகவே தெரியவருகிறது.
எது உண்மை ?
ஆஸ்திரேலியாவின் ஒரு பிராந்தியத்தில் மட்டும் காணப்படும் புஷ்வுட் பெரியிலிருந்து, EBC-46 என்ற ஒரு ரசாயனத்தை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். இந்த ரசாயனத்தை நேரடியான ஊசி மூலம் எலிகள், பூனைகள், நாய்கள் மற்றும் குதிரைகளில் பரிசோதித்த போது, அவற்றின் புற்றுநோய் கட்டிகளை இந்த ரசாயனத்டினால் அழிக்கும் திறனைப் பற்றிய முதல் படியை வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர். தற்போது விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் இந்த ரசாயனத்தை குறித்த மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன .
எது பொய் ?
புற்றுநோய் என்பது பல்வேறு வகையான நோய்களைப் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொல். எல்லா வகை புற்றுநோய்களையும் ஒரே மருந்தால் குணப்படுத்த முடியாது. ஆஸ்திரேலிய புஷ்வுட் பெர்ரியில் காணப்படும் குறிப்பிட்ட EBC-46 என்ற ரசாயனப்பொருள், ஆய்வகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, சில வகை புற்றுநோய்க் கட்டிகளை விலங்குகளில் குணப்படுத்துவதாக, ஆய்வுக்கூட பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது. இதனால் புஷ்வுட் பெரியின் மருத்துவ மதிப்பு கூடுவதாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், புஷ்வுட் பெரியை சாதாரணமாக சாப்பிடுவதானால், அதிலுள்ள பிற பொருட்களால் உடல் நலம் பாதிக்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த EBC-46 என்ற ரசாயனப்பொருள் இன்னும் மனிதர்களிடம் முழுமையாக சோதிக்கப்படவில்லை. இதில் மிக முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால், இந்த ஆராய்ச்சி முழுக்க முழுக்க QBiotics என்ற ஃபார்மசி நிறுவனத்தினாலெயே நடத்தப்படுகிறது. அவர்களே EBC-46 ரசாயனத்தைப் பிரித்தெடுக்கும் முறைக்கான காப்புரிமையைப் பெற்றுள்ளனர்.
ஆகவே இதனை புற்றுநோய்க்கான ஒரு இயற்கை சிகிச்சையாக சமூக வலைத் தளங்களில் தகவல் பரப்புவது சரியாகப் படவில்லை.