மூன்று நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுடனான 7 புரிந்தணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
விண்வெளி ஆராய்ச்சி, விவசாயம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த இவ்வேழு ஒப்பந்தங்களில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து, தீவிரவாத ஒழிப்பு, இருதரப்பு உறவு மேம்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். இன்று, இஸ்ரேல் அதிபர் ரியூவன் ரிவ்லினை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, இந்தியாவுக்காக இஸ்ரேலும், இஸ்ரேலுக்காக இந்தியாவும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றில் மூன்று விண்வெளி ஒத்துழைப்பாகும்.
ஒப்பந்தங்கள் :
- இந்தியா, இஸ்ரேல் இடையே தொழில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை அமைப்பு நிறுவுவது, தொழில்நுட்பத்திற்கான நிதி ஒதுக்குவது
- இந்தியாவில் நீர் பாதுகாப்பு மேற்கொள்ளுதல்
- இந்தியாவில் நீர் சேமிப்பு மற்றும் பயன்பாட்டு சீர்திருத்தம் மேற்கொள்ளுதல்
- இந்தியா, இஸ்ரேல் வளர்ச்சி ஒத்துழைப்பு
- அணு அதிர்வு கடிகாரம் உருவாக்குவதற்கு திட்டமிடுதல்
- ஜியோ-லியோ (சாட்டிலைட் இணைப்புகள்) இணைப்புகளில் ஒத்துழைப்பு மேற்கொள்வது
- சிறிய வகை சாட்டிலைட்கள் உருவாக்குவதில் ஒத்துழைப்பு போன்ற ஏழு ஒப்பந்தங்கள் இன்று இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகின.