இன்று முதல் தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து

இன்று முதல் தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்படுவதால்,  சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் மொத்தமாக 58% ஒரு டிக்கெட்டுக்கு வசூலிக்க வேண்டியிருப்பதால், டிக்கெட் விலை வெகுவாக உயரும் நிலை உள்ளது.  இவற்றுடன் தியேட்டரில் விற்கும் உணவுப் பொருள்களின் விலையும் உயரும். இவையெல்லாம் சேர்ந்து, தியேட்டருக்கு சினிமா பார்க்கச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்து, திருட்டு விடியோ, ஆன்லைன் விடியோ பைரசி ஆகியவை அதிகரிக்கும் நிலை உள்ளது.

மேற்கண்ட காரணங்களால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கேளிக்கை வரி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 3-ந் தேதி (இன்று) முதல் தியேட்டர்களை மூடுவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால், இப்போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரினார்.

இந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் நிருபர்களை சந்தித்த அபிராமி ராமநாதன், திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்களை மூட முடிவு செய்து இருப்பதாக அறிவித்தார். திரைப்படத் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது. தமிழகம் முழுவதும் 1,000 திரையரங்குகள் உள்ளன. அனைத்திலும் காலவரையின்றி சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று அபிராமி ராமநாதன் கூறினார்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top