கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 5 ஏக்கருக்கும் அதிகமாக வைத்துள்ள விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், 3 மாதங்களில் அரசாணை வெளியிடவும் கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு, 5 ஏக்கருக்கும் குறைவாக வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதின்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு எந்த அடிப்படையில் கடன் தள்ளுபடி கோரப்பட்டது என்பது குறித்து அய்யாகண்ணு உள்ளிட்டோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.