ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா தொடர்ச்சியாக 3வது வெற்றியை வசப்படுத்தி அசத்தியது. டெர்பி கவுன்டி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. பூனம் ராவுத், மந்தனா இருவரும் இன்னிங்சை தொடங்கினர்.
இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது. மான்சி ஜோஷி 4, பூனம் யாதவ் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 4, சாடியா யூசுப் 2, டயானா, அஸ்மாவியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 50 ஓவரில் 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.
பாக். 38.1 ஓவரில் 74 ரன்னுக்கு சுருண்டது. இந்திய பந்துவீச்சில் ஏக்தா பிஷ்ட் 5, மான்சி 2, ஜுலன், தீப்தி, ஹர்மான்பிரீத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பிஷ்ட் ஆட்ட நாயகி விருது பெற்றார். இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை தொடர்ந்து பாகிஸ்தானையும் வீழ்த்திய இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.