கதிராமங்கலத்தில் இருந்து போலீசார் உடனே வெளியேற வேண்டும்; ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை எண்ணெய் கிணறுகள் அமைத்தது. இதில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. தற்போது இந்த இடத்தில் புதிய குழாய் களை பதிக்கும் பணியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், கதிராமங்கலம், கொடியாலம் பகுதியில் எண்ணெய் குழாய் உடைந்து, கச்சா எண்ணெய் வெளியேறியது.
இதை அறிந்ததும் அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து போராட்டம் நடத்தினர். உடனடியாக கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர். எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதியில் தீ வைக்கப்பட்டதால் போராட்டம் மேலும் வலுத்தது. போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இருப்பினும் தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து வருகிறது.
போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கதிராமங்கலத்தை தனி தீவு போல் துண்டாக்கி அங்கு வாழும் மக்கள் மீதும், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீதும் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி அராஜகமாக கைது செய்திருப்பதற்கும், அக்கிராமத்தையே போர் பகுதி போல் அறிவித்து ஆயிரக்கணக்கில் போலீஸாரை குவித்து வைத்திருப்பதற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். திடீரென ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் குழாய்கள் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு மக்கள் கொதித்து எழுந்ததை “காவல்துறை” கொண்டு அடக்க நினைப்பது ஆளுகின்ற அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை காட்டுகிறது.