பண்டைய வரைபடத்தைக் காண்பித்து இந்தியப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாடும் சீனா

எல்லையில் இந்தியா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள சீனா 127 ஆண்டுகளுக்கு முந்தைய மேப்பை வெளியிட்டு இந்தியப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாட முயல்கிறது.

இந்திய, திபெத், பூட்டான் முச்சந்திப்பிலுள்ள 269 சதுர கி.மீ பரப்பளவிலான ஒரு நிலப்பரப்பு சீனாவினால் தனது என்று உரிமை கொண்டாடப்படுகிறது. இவ்விடத்தில் சாலைத் கட்டுமானம் தொடர்பாக சீன மற்றும் இந்தியத் துருப்புக்களுக்கு இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. சீனா அடாவடியாக இங்கு புதிதாக ராணுவச் சாலையை உருவாக்க முயலுவதால்,  புது டெல்லிக்கும், பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகளில் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2013-ல் தாவ்லத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi) -இல் இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட நெருக்கடியைப் போல இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது.

 

தற்போது அங்கு சீனாவின் சாலை அமைக்கும் பணியையும் தடுத்து நிறுத்தி உள்ளது. இந்தியா தனது 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளது.

 

இந்நிலையில் சீனா, பேச்சுவார்த்தைக்கு எல்லையில் இருந்து ராணுவத்தை இந்தியா திரும்ப பெற வேண்டும் என்றும் 1962 போரை குறிப்பிட்டு இந்திய ராணுவம் வரலாற்றில் இருந்து பாடத்தை கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் எச்சரிக்கையை விடுத்தது. இதனையடுத்து இந்திய அரசு  எல்லையில் அடாவடியாக சாலை அமைக்கும் திட்டம் விவகாரத்தில் சீனாவிற்கும் இந்தியா எச்சரிக்கையை விடுத்தது. டோக்லாம் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் மிகவும் கவலையை அளிக்கிறது என இந்தியா தெரிவித்தது. எங்களுடைய ராணுவ நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என இந்தியா தெரிவித்துவிட்டது.

 

1962–ல் இருந்த அன்றைய இந்தியாவின் நிலையும், இன்றைய 2017–ம் ஆண்டின் இந்தியாவின் நிலையும் வேறானவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாக சீனாவிற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. டோங் லாங்  சீனாவின் பகுதி. அதை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என புகார் கூறியுள்ளது. மேலும் 1890-ம் ஆண்டு அதாவது 127 ஆண்டுக்கு முந்தைய  ‘மேப்’ (வரை படத்தை) சீனா வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து – சீனா இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் சிக்கிம் மற்றும் திபெத் சம்பந்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த ஒப்பந்தத்தில் இங்கிலாந்து கவர்னர் லாங்ஸ்டவுன் பிரபுவும், சீனாவின் லெப்டினென்ட் கவர்னர் செங்தாயும் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் ஒரு போட்டோவையும் சீனா வெளியிட்டுள்ளது. சீன எல்லையில் இந்திய ராணுவத்தின் 2 புல்டோசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் சிவப்பு கோடிட்டு காட்டியுள்ளது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. டோங் லாங் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி எல்லையில் இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top