ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் ஆதரவு சேகரித்தார்

பாரதீய ஜனதா கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளவர் ராம்நாத் கோவிந்த்.  இவர் தேர்தலில் தனக்கு ஆதரவு தர கோரி சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலுக்கு ராம்நாத் கோவிந்த் சென்றார்.

அங்கு தன்னை சந்தித்த புதுவை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.யிடம் ஆதரவு திரட்டினார்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அவர்களை தனித்தனியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அவர், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கோரினார்.  அதன்பின்னர், சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று பிற்பகல் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பு எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஓ. பன்னீர் செல்வம் நிருபர்களீடம்  கூறியதாவது:-

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க ஒருமனதாக உறுதி அளித்துள்ளோம். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெறுவது உறுதி. ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தைதான் ஆதரித்திருப்பார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக, என்னிடம் ஆதரவு கேட்டது ஜெயலலிதாவின் தொண்டனுக்கு கிடைத்த மரியாதையாக நினைக்கிறேன்  என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அம்மா அணியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.  மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top