வேலூர் ஜெயிலில் நளினியும் முருகனும் தடைக்குப் பின்னர் மீண்டும் சந்திப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினியை கோர்ட்டு உத்தரவுப்படி முருகன் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து அரை மணி நேரம் பேசி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி முருகன் அடைக்கப்பட்டிருந்த ஜெயில் அறையில் இருந்து 2 செல்போன், 3 சிம்கார்டுகள், ஒரு சார்ஜர் ஆகியவற்றை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் கோர்ட்டில் இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

அதைத்தொடர்ந்து சில நாட்களில் முருகன் தனது மனைவி நளினி மற்றும் பார்வையாளர்களை சந்தித்து பேச தடைவிதித்து சிறைத்துறை டி.ஐ.ஜி. முகமது ஹனிபா உத்தரவிட்டார். அதனால் 15 நாட்களுக்கு ஒருமுறை நிகழும் நளினி-முருகன் சந்திப்பு நடைபெறவில்லை. இதற்கிடையே முருகனை சந்திக்க இலங்கையில் இருந்து வந்த அவரது தாயார் சோமணி வெற்றிவேல் பலமுறை முயன்றும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறைத்துறை டி.ஐ.ஜி., முருகனுக்கு விதித்த 3 மாத தடை உத்தரவு நீங்கியது.

இதையடுத்து 3 மாதங்களுக்கு பின்னர், பெண்கள் ஜெயிலில் உள்ள மனைவி நளினியை நேற்று முருகன் சந்தித்தார். காலை 7.50 மணியளவில் முருகன் மனைவி நளினியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ½ மணி நேரம் நடந்தது. தொடர்ந்து 8.20 மணிக்கு முருகன் ஆண்கள் ஜெயிலுக்கு வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் தலைமையில், போலீசார் அழைத்து சென்று அடைத்தனர்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top