சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், வருமான வரித்துறை அனுப்பி வைத்த ஆவணங்களை கேட்டு தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டதும், இதற்காக ஒரு அமைச்சர், உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா ஆகியவை தமிழகத்தில் தடையின்றி விற்பனை செய்யப்பட்டது குறித்து மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா தனது துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தினார்.
அப்போது இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசின் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்புவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குட்கா விவகாரத்தில் அளிக்கப்பட்ட லஞ்சம் தொடர்பாக வருமான வரித்துறை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அனுப்பி வைத்ததாக கூறப்படும் ஆவணங்கள் மற்றும் அறிக்கையின் நகலை கேட்டு தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த ஆவணங்களில் குட்காவை சட்டவிரோதமாக விற்பதற்காக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட லஞ்சம் குறித்த விவரங்கள் அடங்கி இருப்பதால், அவற்றை ஆய்வு செய்து அந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தும் நோக்கில், உள்துறை அமைச்சகம் அந்த ஆவணங்களை கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.