புதிய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு: பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி தொடங்கி வைத்தனர்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக் கிழமை) நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தொடங்கி வைத்தனர்.

நம் நாட்டில் தற்போது இருக்கும் உற்பத்தி வரி, விற்பனை வரி என்ற பல்வேறு விதமான மறைமுக வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியான சரக்கு, சேவை வரி என்ற புதிய ஜி.எஸ்.டி. வரி  மத்திய அரசு முடிவு செய்தபடி, ஜூலை 1-ந் தேதி (இன்று) முதல் நாடு முழுவதும்  அமல்படுத்தப்பட்டது.

பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தின் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலை வகித்தார். பாராளுமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஜிஎஸ்டி அறிமுக கூட்டம் தொடங்கியது.  முதலில்  மத்திய மந்திரி அருண் ஜெட்லி  ஜி.எஸ்.டி குறித்து உரையாற்றினார். அவரை தொடர்ந்து  பிரதமர் மோடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை தொடங்கி வைத்து உரையாற்றினார். இறுதியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஜிஎஸ்டி குறித்து சிறப்பு உரையாற்றினார்.

அதனைதொடர்ந்து மணியடித்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி இணைந்து தொடங்கி வைத்தனர். நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது.

ஜி.எஸ்.டி. தொடர்பாக பிரதமர் மோடி தனது உரையில் கூறியதாவது:

இன்று நள்ளிரவில் நாட்டின் எதிர்கால பாதையை முடிவு செய்ய இருக்கிறோம். இந்திய வரலாற்று நிகழ்விற்கு நாட்டின் 120 கோடி மக்களே சாட்சி. நாட்டின் கூட்டாச்சி தத்துவத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த முடிவு எடுப்பதற்காக பல்வேறு தரப்பினரின் உழைப்பு, அர்பணிப்பு இடம்பெற்று இருக்கிறது. நமது எல்லோரது முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

முதலில் மாநிலங்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தது. தொடர்ந்து ஆலோசித்து வந்ததையடுத்து, அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முயற்சித்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காமல் போகாது. சர்தார் வல்லபாய் பட்டேல் 500 பகுதிகளை சேர்த்து ஒரு தேசமாக காட்டினார்.

அதுபோலத்தான் பல்வேறு வரிகள் சேர்ந்து, ஜிஎஸ்டியாக உருவாகி உள்ளது. ஒரு பொருளின் தயாரிப்பு விலை ஒன்றாக இருக்கும், மாநிலத்திற்கு மாநிலம் அது மாறுபட்டு இருக்கும். ஜிஎஸ்டி வரியால்,அந்த நிலை மாறி, தேசம் முழுவதும் ஒரே வரியாக இருக்கும்.

மேலும் அவர் கூறுகையில், ஊழல்,கருப்பு பணத்தை ஒழிக்கவும் , அதிகாரிகள் தொந்தரவு குறையவும், வியாபாரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும் ஜி.எஸ்.டி. உதவும் என்றார்.

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top