தமிழகத்தில் ஜி.எஸ்.டி. : வரிவிதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு; பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பு என்கிறார் ஸ்டாலின்

தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து நாளை மாநிலம் முழுவதும் கடையடைப்பில் ஈடுபடுகிறார்கள். மேலும், தமிழகத்தில் அமல்படுத்தப்படும் ஜி.எஸ்.டி. வரியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அ.தி.மு.க. அரசே பொறுப்பு என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“ஒரே நாடு ஒரே வரி” என்று வம்படியாக சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அவசர அவசரமாக மத்திய அரசு கொண்டு வருவது ஒருபுறமிருக்க, அதை விட வேகமாக அ.தி.மு.க. அரசு இந்த சட்டத்திற்கு சட்டமன்ற ஒப்புதலைப் பெற்று, வருகின்ற ஜூலை 1-ந் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு கொண்டு வருகிறது.

தமிழகம் ஏற்கனவே வறட்சியில் வாடிக்கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிவிட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தே வங்கி சேவைகளும், சிறு குறு வர்த்தக நிறுவனங்களும் இன்னும் சகஜ நிலைக்கு திரும்பி வரவில்லை. மாநிலத்தின் நிதி நிர்வாகம் நிலை குலைந்து விட்டது என்று ரிசர்வ் வங்கி அறிக்கையே சுட்டிக்காட்டியிருக்கிறது.

இவ்வளவு நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் அமல்படுத்தப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அ.தி.மு.க. அரசு முழுப்பொறுப்பேற்பது மட்டுமல்ல, மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே தீர வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கன்னியாகுமரியில் நடைபெற்ற வணிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். “மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 30ம் தேதி வணிகர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். நள்ளிரவில் அமலுக்கு வரும் இந்த வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் கருப்பு கொடி ஏற்றப்படும். ஒவ்வொரு கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றி எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம்” என்று தெரிவித்தார்.

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top