அமெரிக்க அதிபர் டிரம்பின் நிறைவேற்று அதிகாரத்தில் வெளியிடப்பட்ட பயணத்தடையில், உச்ச நீதிமன்றம் அனுமதித்த பகுதிகள் இன்றிலிருந்து அமலுக்கு வருகிறது. பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழ்கின்ற 6 நாடுகளின் பிரஜைகளுக்கும், அகதிகளுக்கும் புதிய விசா வரையறை பின்பற்றப்படும்.
இந்த நாடுகளை சேர்ந்தோரும், அகதிகளும் இனிமேல் அமெரிக்கா விசா பெறுவதற்கு, அமெரிக்காவோடு நெருங்கிய குடும்ப அல்லது வர்த்தகத் தொடர்புகள் கொண்டவராக இருக்க வேண்டும் என்று இந்த புதிய வரையறை வலியுறுத்துகிறது.
இரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் நாட்டு மக்களை பாதிக்கின்ற இந்த விதிமுறைகள் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன.
அதிபர் டொனால்ட் டிரம்பின் பயணத்தடை உத்தரவின் ஒரு பகுதியை உச்ச நீதிமன்றம் அனுமதித்த பின்னர், இந்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகள்படி, நெருங்கிய உறவுமுறையுடைய பெற்றோர், மனைவி, குழந்தை, மருமகன் அல்லது மருமகள், அல்லது அவர்களின் குழந்தைகள் ஆகியோரை தவிர இந்த ஆறு நாடுகளை சேர்ந்த ஏனையோர் அடுத்து வரும் 90 நாட்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, செல்லுபடியாகும் விசாக்கள் வைத்திருப்போர் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள்.