பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ஏற்கமுடியாது : மோடி

பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குஜராத்தில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

குஜராத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திஜியின் குருவான ஷ்ர்மத் ராஜ் சந்திராஜி அவர்களின் 150-வது பிறந்த தினத்தில் கலந்து கொண்டு பேசும் போது,  பசுப் பாதுகாவலர்களுக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். மேலும் வன்முறையைப் பின்பற்றுவது மகாத்மாவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றார்.

நாடு முழுவதும் மாட்டுக்கறி உண்பவர்கள் மற்றும் மாடுகளை விற்பனைக்காகக் கொண்டு செல்பவர்களை, பசுக் காவலர்கள் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்தச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.

டெல்லியில் கடந்த இரு தினங்களுக்கு முன், ரயிலில் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதாக கூறி இஸ்லாமியச் சிறுவர்கள் மீது பசுக் காவலர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். அதில், ஜுனைத் கான் என்ற 16 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை எந்த ஒரு கண்டனத்தையும், கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் எழுப்பி இருந்தன. இந்த நிலையில் குஜராத் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top