மாடுகள் இறைச்சிக்காக விற்பனைக்குத் தடை என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு மதுரையிலுள்ள உயர்நீதிமன்ற கிளை தடை நீட்டிப்பு செய்தது.
சென்றமாதம் மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவியது. மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகோமதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவரது பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது :
கடந்த 26-ந்தேதி மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை விதித்தது. மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது சட்டவிரோதம். இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். உணவு என்பது தனி மனித விருப்பமாகும். இதில் அரசு தலையிட உரிமை இல்லை. எனவே மாட்டு இறைச்சி மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இதுபோலவே மதுரையைச் சேர்ந்த ஆசிக் இலாகி பாவா என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் ஆகியோர், மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை விதித்திருந்தனர். தற்போது, மீண்டும் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.