ஐரோப்பாவில் ‘பெட்யா’ ரேன்சம்வேர் தாக்குதல்: பெரிய அளவில் இடையூறு

ஐரோப்பா முழுவது, குறிப்பாக யுக்ரேனில், ‘பெட்யா’ (Petya) என்ற ரேன்சம்வேர் தாக்குதல் தரவு மையங்களிலுள்ள செர்வர்கள் மற்றும் தனிப்பட்ட கணினிகள் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்டுள்ளது. பெரிய அளவில் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ‘வான்னக்ரை’ (Wanna Cry) என்ற ரேன்சம்வேர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை விடவும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யுக்ரேனில், தனியார் நிறுவன மற்றும் அரசாங்க அதிகாரிகள்  அங்குள்ள மின்கட்டமைப்புகள், வங்கிகள் மற்றும் அரசாங்க அலுவலகங்களில் கடுமையான ஊடுருவல்கள் இருந்ததாக அறிவித்தனர்.  மூத்த அதிகாரி ஒருவர், இருண்ட கணினி திரையின் புகைப்படத்தைக் காண்பித்து, “முழு நெட்வொர்க்கும் வேலை செய்யவில்லை ” என்று பதிவு வெளியிட்டுள்ளார். கீவ் நகரிலுள்ள போரிஸ்ஸ்பில் விமான நிலையத்தில் ‘பெட்யா’  ரேன்சம்வேரினால் கணினிகள்  பாதிக்கப்பட்டதால் விமானங்கள் இயங்கவில்லை.

ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் எண்ணெய் நிறுவனமும் டென்மார்க்கின் கப்பல் நிறுவனமான ஏ.பீ. மோல்லர்-மேர்க்கும் ஹேக்கிங்கினால் தமது நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதாக கூறின.

லண்டனை தளமாகக் கொண்ட விளம்பர நிறுவனமான டபிள்யு.பி.பி. (WPP) -யும் ரேன்சம்வேரினால் பாதிக்கப் பட்டதாக ட்விட்டரில் உறுதிப்படுத்தியது.

ரேன்சம்வேர் என்றால் என்ன ?

ரேன்சம்வேர் என்பது கட்டணம் செலுத்தப்படும் வரை ஸ்கிராம்ப்லிங் (scrambling) மூலம் தரவுகளைப் (data) பிணையில் வைத்திருக்கும் நிரல்களுக்கு(software) வழங்கப்படும் பெயர். தற்போதைய பெட்யா  தாக்குதல், இதற்கு முன்னர் உலகளாவிய அளவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள  வான்னகிறை (WannaCry)  ரேன்சம்வேரின் பாதிப்புக்களை  நிறுவனங்கள் முழுமையாக சரிசெய்வதற்குள் ஏற்பட்டிருக்கிறது.

கருப்பு இணைய தளம் (dark web) எனப்படும் சட்டவிரோத பொருட்கள் விற்கும் இணைய தளங்களில்  ரேன்சம்வேர் கிட் என்ற பெயரில் இவை விற்கப்படுவதாகவும், அவற்றைச் சிலர் கொள்முதல் செய்து இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், கசிய விடப்பட்ட அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கோப்புகளிலும் ஹேக்கிங் செய்பவர்களுக்கு உபயோகமாகும் தகவல்கள் இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கைகளில் சில :

  • ரேன்சம்வேர் பொதுவாக விண்டோஸ் கணினிகளையே அதிகமாக பாதிக்கிறது. ஆகவே மைக்ரோசாஃப்டின் சமீபத்திய மென்பொருள் இணைப்பினை நிறுவுதல், பெரும்பாலான பாதுகாப்புப் பிரச்சினைகளை தடுக்கிறது.
  • ஆப்பிள் மற்றும் லினக்ஸ் அடிப்படையிலான தனிக்கணினிகளுக்கு அதிக அளவில் பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது.
  • சந்தேகத்திற்குரிய இமெயிலில் வரும் இணைப்புகளையோ, சில விளம்பரங்களில் வரும் இணைப்புக்களையோ கிளிக் செய்ய வேண்டாம்.
  • இண்டர்னெட்டிலிருந்து தரவிறக்கம் செய்யும் கோப்புக்களை ஆன்டி வைரஸ் ஸ்கேன் செய்தபின் உபயோகிப்பது நல்லது.

 

 

 

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top