வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு என நெதர்லாந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
சமீபத்திய பயணத்தின் ஒருபகுதியாக நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு நெதர்லாந்து வாழ் இந்திய மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். இதில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இங்குள்ளவர்களில் பலர் ஓ.சி.ஐ., கார்டு இல்லாமல் உள்ளனர். 10 சதவீத பேர் மட்டுமே வைத்துள்ளனர். இந்தியாவில் இருந்து இங்கு புலம்பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் ஓ.சி.ஐ., கார்டு வழங்கப்படும். டச்சு பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு இந்தியா வர 5 ஆண்டுக்கான விசா வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். சிறந்த அரசால் மட்டுமே நாட்டில் நல்லாட்சி அமைத்துவிட முடியாது. அதற்கு மக்களின் பங்களிப்பும் அவசியம். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டில் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. இத்திட்டம் வெற்றியடைய மக்களின் பங்களிப்பு தேவை.
வங்கிகள், ஆற்றல் சக்தி, விண்வெளி ஆராய்ச்சி, சுத்தம், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றில் எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 21-ம் நூற்றாண்டில் இந்தியா உட்கட்டமைப்பு மற்றும் பிற துறைகளில் உலகத்தரத்தில் விளங்கும். இனம், மொழி, பண்பாடு, கலாசாரம் என பலவற்றால் வேற்றுமையாக இருப்பினும், இந்தியர்களிடம் இருக்கும் ஒற்றுமையே இந்தியாவின் சிறப்பான அடையாளம்.
இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர், கிராமங்களுக்கு மின்வசதி வழங்கப்படும் திட்டத்தில் இதுவரை 14 ஆயிரம் கிராமங்கள் வரை மின்வசதி வழங்கப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார்.