தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா என்ற போதைப் பொருளை விற்க, தமிழக அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அதிகாரிகளுக்கும் ரூ. 40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டிக்கத் தக்கது என்று பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் போதைப் பொருட்கள் வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றவர்கள் பற்றி விசாரிக்க வலியுறுத்தி உள்ளார். லஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது : “தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பாக்குகளை தடையின்றி விற்பனை செய்வதற்காக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதாக வருமானவரித்துறை விசாரணையில் தெரியவந்த உண்மை குறித்து தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழலை மூடி மறைக்கும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.”
மேலும் அவரது அறிக்கையில், “ஜனநாயகம் எனப்படுவது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சியாகும். ஆனால், தமிழகத்திலோ ஊழல் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக ஊழல் குற்றவாளிகளால் நடத்தப்படும் ஊழலாட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சியாளர்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் குட்கா ஊழல், மணல் ஊழல் ஆகியவற்றில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் ஊழல் குற்றவாளிகளுக்கும், அவர்களை பாதுகாத்த ஆட்சியாளர்களுக்கும் மக்கள் தண்டனை அளிப்பர்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.