அதிமுகவில் உள்கட்சி மோதல்கள் வலுத்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோரின் கோஷ்டிகளிடையே பனிபோர் உச்சநிலையை அடைந்து உள்ளது.
தமிழகத்தில் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆளும் கட்சியான, அ.தி.மு.க., பிளவுபட்டு, இரு அணிகளாக செயல்படுகிறது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கமும் தொண்டர்கள் திரளாக உள்ளனர். சசிகலா ஆசியுடன் பழனிசாமி முதல்வரானபின், சசிகலாவின் உறவினரான டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுப் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
சிறையில் இருந்து சென்னை திரும்பிய டி.டி.வி. தினகரன், கட்சி பணிகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். அவருக்கு அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த 34 எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அவரது வருகையை விரும்பவில்லை. இதனால் அ.தி.மு.க. (அம்மா) அணிக்குள்ளேயே புகைச்சலும், எதிர்ப்பும் உருவானது.
கட்சி யார் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்பதில் தினகரன்-எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இடையே மெல்ல, மெல்ல பனிப்போர் ஏற்பட்டது. இந்த பனிப்போர் வலுத்து இரு தரப்பு எம்.எல்.ஏ.க்களும் தற்போது மாறி மாறி வெறுப்பு கருத்துகளை வெளியிட தொடங்கி உள்ளனர்.
‘சசிகலா குடும்பத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் வேகப்படுத்த முதல்வர் விரும்பவில்லை. ‘அந்தக் குடும்பத்துடன் இணக்கம் காட்டினால், நமக்குத்தான் இழப்பு’ என்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி’ என்று எடப்பாடி கோஷ்டியினர் கூறுகின்றனர். நேற்று பேசிய எம்.பி கோ.அரி, ‘சசிகலா ஆதரவுடன் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்தோம் என தம்பிதுரை கூறுவதை ஏற்க முடியாது. அது அவருடைய சொந்தக் கருத்து. தமிழகத்தில் கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி பழனிசாமிதான் வழிநடத்தி வருகிறார்’ என்றார். இதற்குப் பதிலடியாக எம்.எல்.ஏ. வெற்றிவேல், ‘இன்னும் எத்தனை காலம், எடப்பாடி பழனிசாமி மௌனமாக இருக்கப் போகிறார் எனத் தெரியவில்லை. நரசிம்மராவ் அமைதியாக இருந்ததால்தான், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் இந்திரா காந்தி குடும்பம் வந்துதான், கட்சியைக் காப்பாற்றியது. அதைப்போன்ற நிலை அ.தி.மு.கவுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால், தான்தோன்றித்தனமாக பேசுகின்றவர்களை முதல்வர் தடுக்க வேண்டும். இப்போதும் சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் கட்சி உள்ளது’ என்றார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், “அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை.”, என்றவாறு தனித்தனி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.