அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். நேற்று முன்தினம் போர்ச்சுக்கல் சென்றடைந்த மோடி, அந்நாட்டு பிரதமர் அன்டோனியோ காஸ்டாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இதில் இரு நாடுகள் இடையே, வர்த்தகம், விண்வெளி, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
நேற்று காலை அமெரிக்கா வந்தடைந்த மோடிக்கு, தலைநகர் வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மோடியைக் குறித்து, ‘உண்மையான நண்பருடன் இருதரப்பு முக்கிய பிரச்னைகள் குறித்து பேச அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்கிறேன்’ என டிவிட்டரில் பதிவிட்டார்.
பயணத்தின் முதல் நாளான நேற்று, அமெரிக்காவின் 20 முன்னணி நிறுவன சிஇஓக்களுடன் வட்ட மேஜை மாநாட்டில் மோடி பங்கேற்றார். இதில், ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக், வால்மார்ட் தலைவர் மெக்மில்லன், கார்டர் பில்லரின் ஜிம் உம்பிலிபை, கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட்டின் சத்ய நாதெள்ளா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.