சீனாவில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 15 பேர் பலியாகி இருப்பதாகவும் 120 பேரைக் காணவில்லை. சீனாவின் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்கள் குறிப்பாக மழைக்காலங்களில் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்படுவது வழக்கமாகும். தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதன் எதிரொலியாக மலை அடிவாரத்தில் உள்ள ஜின்மோ கிராமத்தில் நேற்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மண்களும், பாறைகளும் சரிந்து விழுந்தன.
இதில் சுமார் பல வீடுகளுடன், 140க்கும் மேற்பட்டோரும் உயிருடன் மண்ணில் புதைந்தனர். இவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. பெரும்பாலானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. திபெத் – அபா பகுதிக்கு இடையே உள்ள மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், இவை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு ஆற்றின் நீரோட்டத்தை தடுத்துள்ளதோடு, 1.6 கிமீ தொலைவுக்கு சாலையையும் மூடியுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கயிறு கட்டி பாறைகள் அகற்றப்பட்டு, மீட்பு பணிகள் நடந்து வருகிறது. சுமார் 500 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு மணல் குவியல்களில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தேடி வருகின்றனர்.