நியூயார்க் மாகாண அட்டார்ணி ஜெனரல் எரிக் ஸ்னைடர்மேனுடன் இந்தியாவின் இன்ஃபோசிஸ், விசா மீறல் வழக்கில் $ 1 மில்லியன் அபராதம் செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளது.
இத்தீர்வு இன்போசிஸ், அவுட்சோர்சிங் சேவைகளை வழங்கும் போக்கில், நியூயார்க் மாகாணத்திற்கு வெளிநாட்டு ஐடி பணியாளர்களை கொண்டுவந்து, தங்கள் விசாக்களின் விதிமுறைகளை மீறி பணியாற்றச் செய்ததாக அம்பலமான கூற்றுக்களை நிவர்த்தி செய்கிறது.
அட்டார்ணி ஜெனரல் மேலும், “இன்போசிஸ் நியூயார்க்கில் உள்ள அவர்களது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பொதுவாக நடைமுறையில் உள்ள ஊதியம் வழங்காமலும், வரி செலுத்தாமலும் இருந்து வந்துள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது:
நிறுவனங்கள் நியூயார்க் மாகாணத் தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக, எங்கள் சட்டங்களை மீறி நடக்க அனுமதிக்க மாட்டோம். தொழிலாளர் சந்தை நியாயமானதாகவும், நேர்மையான போட்டித்தன்மை உடையதாகவும், அனைவருக்கும் வெளிப்படையானதாகவும் இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு எனது அலுவலகம் கடமைப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ல விவரப்படி, இன்போசிஸ் பணியாளர்களுக்கு B-1 விசாக்களைப் பெற்றுள்ளது. இது H-1B வேலை அனுமதிக்கு பதிலாக தற்காலிக பார்வையாளர் விசாக்கள் ஆகும். பார்வையாளர் விசாக்கள் மிகவும் எளிதாகப் பெறலாம்; H-1B விசாக்களுக்கு 65,000 உச்ச அளவு இருப்பதுபோல B-1 விசாக்களுக்குக் கிடையாது.