கையடக்க செயற்கைக்கோள் ‘கலாம் சாட்’ – ஐ தயாரித்த மாணவர் முகமது ஷாருக் ரிபாத் ராஜுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் நிதி வழங்கினார்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் உள்ள, கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவர், முகமது ஷாருக் ரிபாத் ராஜ், கையடக்க செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கினார்.
64 கிராம் எடை உடையது; ஒரு லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்டதுமான, இந்த செயற்கைக்கோளுக்கு, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நினைவாக, ‘கலாம் சாட்’ என, பெயரிடப்பட்டது. இக்கையடக்க செயற்கைக்கோள் அமெரிக்காவில் உள்ள, ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, ஜூன் 22-ம் தேதி வெற்றிகராக விண்ணில் ஏவப்பட்டது.
இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடிதந்த மாணவர் ரிபாத் ராஜுக்கு சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், தமிழக முதல்வரின் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.