அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறவிருக்கின்ற இந்திய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்கட்சிகளின் சார்பாக மீரா குமார் தெரிவு செய்யப்பட்டார். தலித் தலைவராக இருந்த ஜக ஜீவன் ராமின் மகளும், மக்களவை முன்னாள் சபாநாயகராகவும் இருந்த மீரா குமாரை, காங்கிரஸ் உட்பட 17 கட்சிகள் ஒருமனதாக ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்தனர்.
முன்னதாக, பாரதீய ஜனதாவும் அதன் தோழமைக் கட்சிகளும் பீகார் கவர்னராக பதவி வகித்த ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தன. ராம்நாத் கோவிந்தும் ஒரு தலித் தலைவரே. தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.க. (அம்மா) மற்றும் அதிமுக (புரட்சித் தலைவி) அணிகள் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் அவருக்கு ஆதரவளிப்பதாக கூறியிருந்தார். எனினும், தற்போது எதிர்கட்சிகளின் வேட்பாளர் அறிவிக்கப் பட்ட பின்னர், நிதிஷ் குமார், தனது ஆதரவை மாற்றிக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.