சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் விருதுகளுக்கு தமிழ் மொழியில் ஜெயபாரதி, வேலு சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் 35 வயதுக்கு உட்பட்ட எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும், குழந்தை இலக்கியத்துக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதும் வழங்கப்படுகின்றன. இதற்காக சாகித்ய அகாடமியின் நிர்வாக குழு கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் யுவ சாகித்ய புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் ஆகிய விருதுகளுக்கு தகுதி பெற்ற படைப்புகள், அவற்றின் எழுத்தாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது பெற 24 மொழிகளில் இருந்து 16 கவிதை தொகுப்புகளும், 5 சிறுகதை தொகுப்புகளும், 2 சுயசரிதை நூல்களும், ஒரு கட்டுரை தொகுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டன. பால சாகித்ய புரஸ்கார் விருது பெற 24 படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ் மொழியில் இந்த ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது பெற கவிஞர் ஜே.ஜெயபாரதி (மனுஷி) எழுதிய ‘ஆதி காதலின் நினைவு குறிப்புகள்’ கவிதை தொகுப்பு தேர்வாகி உள்ளது. பால சாகித்ய புரஸ்கார் விருது பெற குழந்தைகள் நாடக கலைஞர் வேலு சரவணன் தேர்வானார். ஒட்டுமொத்த குழந்தைகள் இலக்கிய பங்களிப்பை வழங்கியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளை பெறுவோருக்கு தலா ஒரு தாமிர பட்டயம், ரூ.50 ஆயிரம் காசோலை வழங்கப்படும். பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கும் விழா நவம்பர் 14–ந்தேதி நடைபெறும் என்றும், யுவ புரஸ்கார் விருது வழங்கும் விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சாகித்ய அகாடமி தெரிவித்துள்ளது.
தமிழ் மொழிக்கான பால சாகித்ய விருதுக்கு தகுதி பெறுவோரை வி.அண்ணாமலை, டாக்டர் ஆர்.இளங்கோவன், டாக்டர் எம்.பழனியப்பன் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழுவும், யுவ புரஸ்கார் விருதுக்கு தகுதி பெறுவோரை பி.மதிவாணன், பி.செல்வபாண்டியன், எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோர் அடங்கிய குழுவும் தேர்வு செய்தனர்.