நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கவிருக்கிறது. பாரதீய ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உட்பட பிற எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மற்றொரு அதிமுக கோஷ்டி தலைவரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பா.ஜ. க.வின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேரும் ஏற்றுக் கொள்வார்களா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த சில தினங்களாக எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் அவர்கள், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை எங்கள் பொதுச் செயலாளர் சசிகலாதான் அறிவிப்பார் என்று கூறி வந்தனர். அ.தி.மு.க. கட்சி நிகழ்ச்சிகளான இப்தார் விருந்தை எடப்பாடி தலைமை ஏற்று நடத்தியதையும் அவர்கள் விரும்பவில்லை. எனவே அவர்கள் நேற்று மாலை அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் முக்கியமானவர்களான தங்க தமிழ்ச்செல்வனும், வெற்றிவேலும் இன்று இது தொடர்பாக கூறுகையில், “எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம்” என்றனர். கட்சியில் டி.டி.வி. தினகரனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியபடி உள்ளனர்.